Thursday 25 February 2016

தமிழகத்தின் சொத்து தாமிரபரணி 15 - {நமது தாமிரபரணி நதியின் வரலாறு மற்றும் அதன் அழிவுப்பாதை பற்றிய தொடர் }

முந்தைய பாகம்-14 ற்கு லிங்க்

http://gowthamthamizhan.blogspot.in/2016/01/14.html

தொடர்-15


தாமிரபரணி: மண் மேடாகிப்போன ஸ்ரீவைகுண்டம் அணை

தாமிரபரணி ஆற்றின் கடைசி அணை ஸ்ரீவைகுண்டம் அணை. இங்கே ஆற்றின் நீரோட்டம் ஓடையாக சுருங்கிக்கிடப்பதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. எல்லாம் மனிதப் பிழைதான்.
தூத்துக்குடி மாவட்டத்தின் விவசா யத்துக்கு உயிர் நாடியாக திகழ்வது ஸ்ரீவைகுண்டம் அணை. இந்த அணை 1873-ல் பக்கிள் என்கிற ஆங்கிலேயே அதிகாரியின் முயற்சியால் கட்டப்பட்டது. ஒரு கி.மீ. சுற்றளவுடன் 8 அடி தண் ணீரை தேக்கும் அளவுக்கு இந்த அணை கட்டப்பட்டது. ஆனால், பெயருக்குத் தான் 8 அடி. இதுவரை அணை தூர் வாரப்படாததால் இப்போது அணையில் ஒரு அடி கூட தண்ணீரைத் தேக்க முடியாது. அணையில் சுமார் 6 அடிக்கு மேல் மணலும், சகதியும் சேர்ந்துள்ளன. அணைப் பகுதி மேடானதுடன் அமலைச் செடிகளும், சீமைகருவேல மரங்களும் வளர்ந்துள்ளன. இதனால், மழைக் காலங் களில் ஆற்றில் வரும் தண்ணீர் அணை யைத் தாண்டி பெருமளவு வெளியேறி கடலில் கலக்கிறது. ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து பிரியும் தென்கால் மூலம் 12,760 ஏக்கரும், வடகால்மூலம் 12,800 ஏக்கரும் பாசன வசதி பெறும் வகையில் பாசன கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.



பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
 


ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார பல முறை திட்ட மதிப்பீடுகள் தயாரித்தும், பணிகள் நடக்கவில்லை. இந்நிலையில்தான் தூத்துக்குடி மாவட்ட .தி.மு.. செயலாளர் எஸ். ஜோயல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அணையை தூர்வாரக் கோரி வழக்கு தொடர்ந்தார்.
தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடந்த ஜூன் 10-ம் தேதி அணையை தூர் வார அனுமதி அளித்தது. ஆனாலும் தூர் வாரும் பணிகள் சரிவர நடக்கவில்லை என்று கடந்த ஜூலை 6-ம் தேதி .தி.மு.., அணையை தூர் வாரும் போராட்டத்தை நடத்தியது. தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை அறிவித்ததால் அணையை தூர் வாரும் பணிகளை பொதுப்பணித்துறையினர் தொடங்கினர். ஆனால், பணிகளில் தொய்வு நிலவுகிறது

மழைக்கு முன் முடியுமா பணிகள்? 


வரும் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக பணிகளை முடிக்க வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள். ஏனெனில் மழைக் காலத்தில் தூர் வார முடியாது. தூர் வாரினாலும் பயன் இல்லை. இன்னொரு பக்கம் அணைப்பகுதியில் தூர் வார்கிறோம் என்ற பெயரில் மணல் கொள்ளை நடைபெற வாய்ப்பிருப்பதையும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாருவது என்பது தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் பெரும் கனவு. நீண்ட காலத்துக்குப் பின் இப்போது தூர் வாருவதற்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ள நிலையில் பணிகளை அக்கறையுடன் விரைந்து முடிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை

கரையெங்கும் மண்டபங்கள்
 
தாமிரபரணி ஓடும் கரையெல்லாம் நூற்றுக்கணக்கான மண்டபங்கள் சிறியதும், பெரியதுமாக காட்சியளிக் கின்றன. இவை சேர, சோழர், பாண்டி யர் காலங்களில் கட்டப்பட்டவை. திருநெல்வேலி கைலாசபுரத்தில் உள்ள தைப்பூச மண்டபம், திருப்புடை மருதூரில் உள்ள தைப்பூச மண்டபம் ஆகியவை புனிதமானவையாக கருதப்படுகின்றன.
திருமஞ்சன நீர் எடுத்துச் செல்ல திருக்குடம் பொருந்திய மண்டபங்களை அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய பகுதிகளில் காணலாம். வெள்ளக்கோயில் பகுதியில் 42 தூண்களுடன் 150 பேர் வரை அமரக்கூடிய சுடுகாட்டு மண்டபம் இருக்கிறது. ஐங்கோண வடிவிலான மண்டபங்களும் உண்டு. பல்வேறு மண்டபங்களில் ஓவியங்களும், கல்வெட்டு குறிப்புகளும் காணக் கிடைக்கின்றன.
தாமிரபரணியில் படித்துறைகளுக் கும் பஞ்சமில்லை. அத்தாளநல்லூரில் உள்ள படித்துறையில் சத்தியப்படிகள், ஆழ்வார்திருநகரியில் வைகாசி விசாகம் தீர்த்தவாரி, ஸ்ரீவைகுண்டம் நீண்ட படித்துறை, பாபநாசம், குறுக்குத்துறை போன்ற பகுதிகளில் மடித்து மடித்து அமைக்கப்பட்டதான படித்துறைகள் குறிப்பிடத்தக்கவை. இவை தவிர, 100-க்கும் மேற்பட்ட தீர்த்த கட்டங்கள் ஆற்றங்கரையில் இருக்கின்றன.
திருநெல்வேலி, கைலாசபுரத்தில் கைலாசநாத சுவாமி கோயிலுக்கு எதிரே தாமிரபரணி கரையோரத்தில் மண்டபத்தை ஒட்டி 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும் மணற்பரப்பு இருந் துள்ளது. சுதந்திரப் போராட்ட காலத்தி லும், அதற்கு முன்பும் இங்குதான் பொதுக் கூட்டங்கள் நடந்தன. 1908-ம் ஆண்டில் இங்கே நடந்த பொதுக்கூட்டத்தில் ..சி. பேசியிருக்கிறார். தவிர, முத்துராமலிங்க தேவர், நாவலர் நெடுஞ்செழியன், சத்தியவாணிமுத்து, அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட பல் வேறு தலைவர்கள் இங்கே சொற்பொழி வாற்றியுள்ளனர். காலவெளியில் காணா மல் போய்விட்டது அந்த மணல்வெளி

ஓவியரின் மகத்தான முயற்சி
 
தாமிரபரணி கரையோரத்தில் அமைந்துள்ள மண்டபங்களை ஓவியமாக்கும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் பொன்.வள்ளிநாயகம். இவரது ஓவியப் பயணத்தில் பல்வேறு வரலாற்று குறிப்புகள், மக்களின் பண்பாடு, அன்றாட வாழ்க்கையோடு ஆற்றங்கரை மண்டபங்கள் ஒன்றிப்போயிருக்கும் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. “மண்டபங்கள் அமைந்துள்ள திசை, சூரிய ஒளி அவற்றின்மீது விழும் பாங்கு குறித்தெல்லாம் தெரிந்துவைத்துக்கொண்டுதான் அவற்றை ஓவியமாக வரைகிறேன். பவுர்ணமி நிலவு வெளிச்சத்தில் திருநெல்வேலியில் ஆற்றங்கரை மண்டபம் ஒன்றை ஓவியமாக வரைந்திருக்கிறேன். அனைத்து மண்டபங்களையும் வரைந்த பின்பு அவற்றை கண்காட்சியாக வைக்கவுள்ளேன்என்கிறார் அவர்.

தாமிரபரணி: நதிக்குள் புதையுண்ட ரகசியங்கள் அழிவின் சாட்சியாய் நிலைத்த 'கொற்கை'


ஆதிச்சநல்லூரில் புதையுண்டிருக்கும் முதுமக்கள் தாழி. | படங்கள்: கா. அபிசு விக்னேசு.
ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து கிளம்பும் தாமிரபரணி, ஆழ்வார் திருநகரி, ஏரல், ஆத்தூர் வழியாக கடலை நோக்கி பயணிக்கிறது. வழி எல்லாம் வரலாற்றை ரகசியம்போல தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கிறது நதி. ஒவ்வொன்றையும் தோண்டத் தோண்ட ஆச்சர்யம். அவற்றில் கொற்கையும் ஆதிச்சநல்லூரும் பிரமிக்க வைக்கின்றன. மேற்குலகில் நாகரிகம் வளர்ச்சி அடையாத அந்தக் காலகட்டத்தில் இங்கே மாட மாளிகைகளும் கூடகோபுரங்களும் கட்டி மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்

எங்கே போனது துறைமுகம்

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரிலிருந்து ஏரல் செல்லும் வழியில் இருக்கிறது கொற்கை. ஊர் முகப்பில் வீழ்ந்து கிடக்கிறது ஒரு மரம். சுமார் 2000 ஆண்டுகள் பழமையான வன்னி மரம் என்கிறார்கள். அதன் கீழே சில கற்சிலைகள் இருக்கின்றன. வரலாற்றை அசைபோட்டபடி கொற்கையில் கால் வைத்தபோது வெறுமை மனதில் அப்பிக்கொண்டது. ஆள் அரவமற்ற தெருக்கள், சிறு பள்ளிக்கூடம், ஆளே இல்லாத ஒரு தேநீர் கடை என சிறு கிராமமாக காட்சியளித்தது கொற்கை. நாம் நடக்கும் இந்தச் சாலையிலா முத்துக்களை குவித்து வைத்து விற்றார்கள்? ஆயிரக்கணக்கில் அரேபியக் குதிரைகள் வந்திறங்கிய துறைமுகமா இது? எங்கே அந்த கடல் அலைகள்? எங்கே அந்தக் குளம்பொலி கள்? காலச்சக்கரத்துக்கு கருணை ஏது

பாண்டியர்களின் தலைநகரம்
 
கொற்கையைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் ஏராளம். வெளிநாட்டுப் பயணியான தாலமி, கி.பி.130 வரை கொற்கை பாண்டியரின் துறைமுகமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். கி.மு. 300 தொடங்கி கி.பி. 500 வரை பழம் பாண்டியர்கள் கொற்கையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தார்கள். பின்னர் அது மதுரைக்கு மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
தாமிரபரணி கடலில் கலக்கும் முன்பு வண்டலுடன் முத்துக்களையும் வாரிக்கொண்டு வந்திருக்கிறது. அந்த முத்துக்களால் பிரசித்தி பெற்றதுதான் கொற்கை. இங்கே கிடைத்த முத்துக்கள் உலகம் முழுவதும் புகழ் பெற்றன. கிரேக்கர்களும் அரேபியர்களும் போட்டிப் போட்டுக்கொண்டு முத்துக்களை வாங்கிச் சென்றார்கள். “கொற்கையை ஆண்ட பாண்டிய மன்னர்கள், ரோம் நாட்டின் அகஸ்டஸ் மன்னனின் அரசவைக்கு கொற்கை முத்துக்களை பரிசாக அளித்தார்கள்என்று குறிப்பிடுகிறார் வரலாற்று அறிஞர் ஸ்டிராபோ.
பாண்டிய மன்னர்களின் குதிரைப்படைகளுக் காக ஆண்டுதோறும் கொற்கைத் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான பாய் மரக் கப்பல்களில் 16,000 அரேபியக் குதிரைகள் வந்திறங்கின என்று குறிப்பிடுகிறார் வரலாற்று ஆசிரியர் வாசப்.
மறப்போர் பாண்டியன் அறத்தின் காக்கும் கொற்கையம் பெருந்துறை முத்துஎன்கிறது அகநானூறு. ‘நற்றிறம் படரா கொற்கை வேந்தேஎன்கிறது சிலப்பதிகாரம். “கி.மு.2500-ம் ஆண்டு உக்கிரப் பெருவழுதியால் நிறுவப்பட்டு, அகத்தியராலும் பிற தமிழ் புலவர்களாலும் தமிழ் ஆய்வு செய்யப்பட்ட இடைச்சங்கம் எழுந்தது கொற்கையில்தான்என்று தனதுகோநகர் கொற்கைநூலில் குறிப்பிட்டுள்ளார் வரலாற்று ஆசிரியர் ராகவன் அருணாசல கவிராயர்.
சங்க இலக்கியம் மற்றும் வரலாற்றில்மதுரோதய நல்லூர், பாண்டிய கபாடம், கொல்கை, கொல்கை குடாஎன்றெல்லாம் கொற்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
கடல் கொண்ட கொற்கை
பிற்காலத்தில் மார்கோபோலோ மற்றும் கிரேக்கர்களின் குறிப்புகளிலிருந்து கொற்கையை ஆய்வு செய்த பிஷப் கால்டுவெல், அன்றைய ஆங்கிலேய அரசின் உதவியுடன் இங்கே அகழ்வாராய்ச்சி மேற்கொண்டார். அவர் எழுதிய குறிப்பில், ‘இங்கே நிலமட்டத்திலிருந்து எட்டு அடிக்கு கீழே பழங்கால கொற்கைத் துறைமுகம் இருந்துள்ளது. அதில் பாதி கடலிலும் மீதி தாமிரபரணியிலும் புதையுண்டிருக்கலாம்என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்றைய காலத்தில் தாமிரபரணி இங்கே வடக்கு நோக்கி ஓடியது. தற்போது நதி திசைமாறி ஏரலை நோக்கி தெற்கு திசையில் ஓடுகிறது. அதை உறுதி செய்யும் வகையில் இங்கே நட்டாத்தியம்மன் கோயில் இருக்கிறது. ஆற்றில் நடுவே அமைந்த அம்மன் கோயில் என்பதே அதன் பொருள். ஆறு இன்று திசை மாறியிருப்பதை இது உணர்த்துகிறது. அதன் பின்பு மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறை கொற்கையில் 12 இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்து ஏராளமான தொல்பொருள்களை கண்டெடுத்துள்ளது.
தென் தமிழகத்தை கடல்கோள் கொண்டபோது கொற்கை அழிந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அழிவுக்கு இன்னும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், இன்று கொற்கையில் கடல் இல்லை. கடல் அலைகள் இல்லை. கடல் காற்றுகூட இல்லை. ஆனாலும், ஊருக்குள் நடக்கும் போது பாதத்தின் அடியில் சங்குகளும் சிப்பிகளும் மிதிபடுகின்றன. வாழ்வாங்கு வாழ்ந்த தமிழர் வரலாற்றின் எஞ்சிய சாட்சியங்கள் அவை


ஆதிச்சநல்லூர் நாகரிகம்
 
தாமிரபரணி நதிக்கரையிலிருக்கும் ஆதிச்சநல்லூர் நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முற்பட்டது என்கிறார்கள் தொல்லியல் அறிஞர்கள். சுமார் 135 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் சோகோர் இங்கே ஆய்வுகளை மேற்கொண்டார். அதில் கிடைத்த தொல்பொருட்களைஆதிச்சநல்லூர் பொக்கிஷம்என்கிற பெயரில் பெர்லின் அருங்காட்சியகத்தில் வைத்தார். 1902-ம் ஆண்டு அலெக்சாண்டர் இரியா என்பவர், இங்கே ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்டங்கள், ஈட்டி, கோடாரி, பலிவாள், குத்துக் கத்தி உள்ளிட்டவற்றை கண்டெடுத்தார். இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன. அதன் பின்பு தொல்லியல் துறை, கடந்த 2004-ம் ஆண்டு ஆய்வுகளை மேற்கொண்டது. 114 ஏக்கரில் நிலத்தை தோண்டி செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 185 முதுமக்கள் தாழிகளும், இரும்புப் பொருட்களும் கிடைத்தன.

தவழ்ந்தாய் வாழி தாமிரபரணி: சங்குமுகத்தில் சங்கமம்

படம்: கா.அபிசி விக்னேசு
நதி கடலுடன் சங்கமிப்பதை, மணப்பெண் புகுந்த வீட்டுக்குச் செல்வதுடன் ஒப்பிடுவார் கள். ஒப்பீடுகளை எல்லாம் தாண்டி ஒரு நதி கடலுடன் கலப்பது இயற்கையானது.நதியின் நன்னீர் கடலில் கலப்பதற்கும் பருவ மழைக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக் கின்றன. அறிவியல் பூர்வமாக அது ஒரு நீர்ச்சுழற்சி. கடலில் கலக்கும் நதியின் நீர் ஆவியாகி, மழையாக பொழிந்து மீண்டும் நதியாக பிறக்கிறது. இயற்கையின் இனிய சங்கிலித் தொடர் இது. ஆகவே, ‘நதி நீர் விணாகக் கடலில் கலக்கிறதுஎன்று இனியும் சொல்ல வேண்டாம்

காயல்களின் கதை
 
தாமிரபரணி ஆத்தூர், முக்காணி, சேந்த பூமங்கலம் வழியாக புன்னைக்காயலுக்குச் சென்று அங்கு கடலுடன் சங்கமிக்கிறது. பொதிகை மலை உச்சியில் தொடங்கிய நமது பயணத்தில் இதோ தாமிரபரணியின் கடைப்பகுதிக்கு வந்து விட்டோம். தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை யில் சுமார் 18-வது கி.மீட்டரில் ஆத்தூரிலிருந்து உள்ளடங்கி இருக்கிறது புன்னைக்காயல். ஆனால், நதி சங்கமிக்கும் சங்குமுகம் பகுதிக்கு செல்ல பழையகாயலுக்குச் சென்று, அங்கிருந்து படகில் செல்ல வேண்டும்.
மிக சிறிய மீனவக் கிராமம் பழைய காயல். உடைந்த கட்டு மரப்படகில் கடற்கரை தண்ணீரில் துடுப்பு வழித்து விளையாடிக்கொண் டிருக்கிறார்கள் சிறுவர்கள். இந்தப் பகுதி யில் காயல்பட்டினம், புன்னைக்காயல், பழைய காயல், மஞ்சள் நீர்க்காயல் என நான்குகாயல்’-கள் இருக்கின்றன. இவை எல்லாம் ஒருகாலத்தில் பெரும் வணிக நகரங்கள். இந்தக் காயல்களில் கணிசமான அளவு கத்தோலிக்க கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் வசிக்கிறார்கள்.
9-ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூற் றாண்டு வரை முத்து வணிகத்துக்காக வந்த அரேபியர்கள் இங்கேயே வசிக்கத் தொடங் கினார்கள். முத்துக்குளித்தல் தொழிலில் நிலவிய கடும் போட்டியை சமாளிப்பதற்கும் கடல் கொள்ளையர்களிடம் இருந்து தங்களை காத்துக்கொள்வதற்கும் வலிமையான கடற் படையைக் கொண்டிருந்த போர்ச்சுகீசியர்களின் உதவியை நாடினார்கள் பரதவர்கள். இதன் நீட்சியாக கணிசமானோர் கத்தோலிக்க சம யத்தை தழுவினார்கள். ஒருகட்டத்தில் போர்ச்சு கீசியர்களின் வசமிருந்து இந்தப் பகுதி மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. தொடர்ந்து விஜய நகரம், முகம்மதியர், போர்ச்சுக் கீசியர் என்று ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தன. கடைசியாக, முத்துவளம் எல்லாம் சுரண்டப்பட்ட பின்புகாயல்கள்கைவிடப்பட்டு, தமது முக்கியத்துவத்தை இழந்தன

அலையாத்தி காடுகள்
 
பழையகாயலின் கடற் கரையிலிருந்து கடலுக்குள் சுமார் 4 கி.மீ. சென்றால் தாமிர பரணி நதி, கடலுடன் சங்க மிக்கும் பகுதியான சங்குமுகத்தை பார்க்க முடியும்.உதவிக்கு வந்தார் கடலோடி ராஜேந்திரன். அலையாத்தி காடுகளால் சூழந்து வித்தியாசமாக காட்சியளிக்கிறது பழையக்காயல் கடற்கரை. ‘காயல்என்றால் கழிமுகம். நதிகொண்டு வந்து சேர்ந்த வளமான வண்டலில் நன்னீரும் உவர் நீரும் உறவாடி செழிப்பான உயிரி னங்களை உருவாக்கும் இடம் இது. அப்படி உருவானவைதான் அலையாத்திக்காடுகள். இவை கடல் அலைகளின் சீற்றத்தை ஆற்றுப் படுத்தி, நம் வாழ்விடங்களை காக்கின்றன. இந்தப் பகுதி மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின தேசிய காப்பகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கரையிலிருந்து கட்டுமரப் படகைக் கிளப்பினார் ராஜேந்திரன்.
கடல் சில இடங்களில் ஆழம் குறைவாகவும் சில இடங்களில் ஆழமாகவும் காணப்படுகிறது.
சமயங்களில் பழையக்காயலிலிருந்து புன்னைக்காயலுக்கு கடலில் நடந்தே வந்து மீன் பிடிப்போம் என்றார் ராஜேந்திரன். இருபக்கமும் அலையாத்திக்காடுகள், பல்வேறு கடற்பறவை கள் என ரம்மியமாக காட்சியளிக்கிறது தாமிரபரணியின் கழிமுகம். படகுடன் போட்டி போட்டுக்கொண்டு வெள்ளி நிறத்தில் ஏராளமாக துள்ளி வருகின்றன மணலை மீன்கள்

தண்ணீரை உறிஞ்சும் மேகங்கள்
 
தாமிரபரணியில் வெள்ளக் காலங்களில் வேகமாக பெருக்கெடுக்கும் நதியின் நீர், கடலைக் கிழித்துக்கொண்டு தனித்த நீரோட்ட மாக இலங்கை தீவின் பாதி தொலைவில் கடலில் இருக்கும் சுமார் 1300 மீட்டர் ஆழ முள்ள பள்ளத்தாக்கு வரை பாய்கிறது. வெள் ளக்காலங்களில் பச்சை நிறத்திலான அந்த நீரோட்டத்தை கடலின் நீல நிறப்பரப்பில் தனித்து காண முடியும் என்கிறார்கள் கடலோடிகள். பெரும்பாலும் இதுபோன்ற நன்னீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்துதான் மேகங்கள் அதிகமான தண்ணீரை உறிஞ்சுகின்றன. சிலசமயங்களில் வானத்திலிருந்து உருவாகும் சூறைக்காற்று தண்ணீரை அப்படியே சுருட்டிக்கொண்டு வானத் துக்கு உறிஞ்சி செல்வதை இங்குள்ள கடலோடி கள் பார்த்திருக்கிறார்கள்.
பொதுவாக நதியின் நீரோட்டம் கடலின் மேற்பரப்பில் அல்லாமல் சுமார் 5 மீட்டர் கீழ் பரப்பில் பயணிக்கும். கடலில் சுமார் 200 மீட்டர் ஆழம் வரை வளரும் மீன் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களுக்கு ஆதாரமே இந்த நன்னீர்தான். உவர் நீருடன் நன்னீர் கலப்பதால் தான் லட்சக்கணக்கான நுண்ணுயிர்கள் பெருகி கடலின் உயிர்ச்சூழலை சமநிலையில் வைத்திருக்கின்றன.” என்கிறார் கடல் ஆய்வாளர் ஒரிசா பாலு

நதிக்கு நன்றிக்கடன்
 
கிட்டத்தட்ட கடலை நெருங்கிவிட்டோம். சங்குமுகத்தில் கடல் பழுப்பும் பச்சையும் கலந்து சற்றே நிறம் மாறி காட்சியளிக்கிறது. இங்கே தாமிரபரணி மூன்று கரங்களாக பிரிந்து கடலை தழுவுகிறாள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதுபோல கடல் அலைகள் ஓங்கும்போது நதியலைகள் பின்வாங்குகின்றன. நதியலைகள் ஓங்கும்போது கடல் அலைகள் உள்வாங்கின்றன. நதிக்கும் கடலுக்கும் இருக்கும் பரஸ்பர புரிதல் உறவு இது. சின்ன சின்னதாய் மணல் திட்டுகள் இருக்கின்றன. அவற்றில் கூட்டமாக ஓய்வெடுக்கின்றன பறவைகள். இங்கிருக்கும் சிறு தீவில் சிறு பிள்ளையார் கோயில் இருக்கிறது. இன்னொரு தீவில் அந்தோணியார் ஆலயம் இருக்கிறது. சங்குமுகத்தில் மக்கள் மலர் தூவி வழிபடுகிறார்கள். காலமெல்லாம் தங்களை வாழ்விக்கும் தாமிரபரணி தாய்க்கு செய்யும் நன்றிக்கடன்.

 

                                               **************முற்றும்**************