Monday 7 December 2015

தமிழகத்தின் சொத்து தாமிரபரணி 7 - {நமது தாமிரபரணி நதியின் வரலாறு மற்றும் அதன் அழிவுப்பாதை பற்றிய தொடர் }




முந்தைய பாகம்-6 ற்கு லிங்க் 

 http://gowthamthamizhan.blogspot.in/2015/12/6.html

தொடர்-7

காட்டை காப்பாற்றிய பங்கிள்!

இதன்பின்பு கேப்டன் பெட்டோம் (Beddome) மேற்பார்வையில் எரிபொருள் தேவைகளுக்காக சமவெளிகளில் சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. காடுகளைக் பாதுகாக்க வனத்துறையில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டது. 1866-ல் திருநெல்வேலி ஆட்சியர் ஆர்.கே.பக்கிள் (R.K.Puckle), மலையில் இருக்கும் அனைத்துக் காடுகளையும் வனத்துறையின் சிறப்பு பிரிவின் கீழ் கொண்டுவந்தார். முதல்முறையாக மாவட்ட வன அதிகாரி பதவி உருவாக்கப்பட்டு, கேப்டன் ஃபுல்லர்டன் (Fullerton) நியமனம் செய்யப்பட்டார். பக்கிளின் நடவடிக்கைகளுக்கு எதிராக தனியார் சிலர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வந்தது. இதனால் சிங்கம்பட்டி, சொக்கம்பட்டி, சிவகிரி, வைரவகுளம், புதுக்கோட்டை - திருமலைநாயக்கன் ஆகிய ஜமீன்களின் கட்டுப்பாட்டில் இருந்த காடுகளை மீட்க முடியவில்லை.
தொடர்ந்து பக்கிள் காடுகளை ஆய்வு செய்து, அவற்றை சோலை காடுகள், புல்வெளிக்காடுகள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கப்பட்ட காப்புக் காடுகளாக (Reserve forests) வரையறுத்தார். திருநெல்வேலி மாவட்டத்தின் 559.19 சதுர மைல் காடுகளில் 286.81 சதுர மைல் காடுகளை பாதுகாக்கப்பட்ட காப்புக் காடுகளாக அறிவித்தார். அவற்றில் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆற்றில் மணல் அள்ளுவது, ஆக்கிரமிப்பு செய்வது, அசுத்தம் செய்வது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனாலும், இன்னொரு பக்கம் மெட்ராஸ் மகாண அரசின் ஆதரவுடன் வருவாயைப் பெருக்குவதற்காக காடுகள் அழிக்கப்பட்டு, காபி, தேயிலை தோட்டங்கள் பெருகின. தேக்கு உள்ளிட்ட பெரும் மரங்கள் வெட்டப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் பக்கிள். தனது அதிகாரத்துக்கு உட்பட்ட வனத்தில் மரங்களை வெட்ட அரசுக்கே அனுமதி கிடையாது என்று உத்தரவிட்டார். 1867-ம் தேதி செப்டம்பர் 30-ம் தேதி அரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “காடுகளை அழிப்பது தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் தாமிரபரணியில் ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட பார்க்க முடியாதுஎன்று கண்டிப்புடன் எழுதினார். பங்கிளைப் பின்பற்றி மெட்ராஸ் மாகாணத்தின் பல மாவட்டங்களின் காடுகள் பாதுகாக்கப்பட்ட காடுகளாக அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டன. மக்கள், பக்கிளை போற்றிப் புகழ்ந்தனர். தங்கள் குழந்தைகளுக்குபக்கிள்துரைஎன்று பெயரிட்டார்கள். இதனால், இன்றைக்கும் திருநெல்வேலி, தூத்துகுடி ஊர்களில்பக்கிள்துரைபெயர் கொண்ட பெரியவர்களை பார்க்கலாம்.
1882-ல் மெட்ராஸ் காடுகள் சட்டம் இயற்றப்பட்டது. அப்போது தாமிரபரணியை பார்வையிட்ட வனத்துறை .ஜி. பிராண்டிஸ் (Brandis), ‘தாமிரபரணி நதியின் பாதுகாப்பே லட்சக்கணக்கான விவசாயிகளின் பாதுகாப்புஎன்று குறிப்பு எழுதினார். 1887-ல் மாவட்ட வன அதிகாரி பிரேசியர் என்பவர் தாமிரபரணியைச் சார்ந்த ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை பாதுகாக்க திட்டங்களை வகுத்தார். பக்கிளுக்கு பின் வந்த ஆட்சியர்களும் மாவட்ட வன அதிகாரிகளும் நதியை பாதுகாக்க தொடர் முயற்சிகளை எடுத்தார்கள். 1928-ல் அரசாங்கம் தனது வருவாய்க்காக ஒரு ஏக்கர் காட்டில் மூன்று மரங்களுக்கு மேல் வெட்டக் கூடாது என்று புதிய விதிமுறை விதிக்கப்பட்டது.
நாடு சுதந்திரம் அடைந்த பின்பு ஆங்கிலேய அதிகாரிகள் வழியிலேயே இந்திய அதிகாரிகளும் காட்டையும் நதியையும் காக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்தனர். 1948-ல் மெட்ராஸ் எஸ்டேட்ஸ் சட்டம் கொண்டு வரப்பட்டு, 1951-52-ல் ஜமீன்களின் கட்டுப்பாட்டிலிருந்த காடுகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. காடும், தாமிரபரணி நதியும் காப்பாற்றப்பட்டது. ஆனால், அடுத்த 30 ஆண்டுகளில் நதிக்கு மீண்டும் ஒரு சோதனை ஏற்பட்டது.
தாமிரபரணி: நதியை மீட்ட தமிழக வனத்துறை
காரையாறு அணை
 
இரண்டாவது கட்டமாக 1980-களில் தாமிரபரணிக்கு மீண்டும் சோதனை ஏற்பட்டது. காடுகள் அழிக் கப்பட்டதால், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு பக்கிள் சொன்னதுபோல் ஒரு கட்டத்தில் தாமிரபரணி வறண்டே போய்விட்டது. ஆனால், அதன் பின்பு தமிழக வனத்துறை எடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் தாமிரபரணியை மீட்டிருக்கின்றன. இதுதொடர்பான தகவல்களைப் பகிர்ந்துக்கொண்டார் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் முன்னாள் துணை இயக்குநரும் தற் போதைய கொடைக்கானல் மாவட்ட வன அலுவலருமான டி. வெங்கடேஷ்.

வறண்டுபோன தாமிரபரணி
“1970-களுக்குப் பிறகு மீண்டும் காட்டை அழிக்கும் செயல்கள் தொடர்ந்தன. லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. இதனால், வற்றாத ஜீவநதியாக ஓடிய தாமிரபரணி, 1980-களில் கோடையில் நான்கு மாதங்கள் வறண்டது. இந்த நிலையில் 1990-ல் இந்த பகுதி களக்காடு - முண்டந் துறை புலிகள் காப்பகமாக அறிவிக்கப் பட்டது. 1995-ல் சூழல் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. 178 கிராமங் கள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளூர் மக்களைக் கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன. 64 வகையான மாற்று சிறு தொழில் பயிற்சிகள் மற்றும் கடன் உதவிகள் வழங்கப்பட்டன. 2000-களில் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு, 243 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டது. தற்போது இதன் மூலம் 34,000 குடும்பங்கள் பலன் பெறுகின்றன


                                                                                                            இன்னும்  ஓடுவாள்

No comments:

Post a Comment