Sunday 29 November 2015

தமிழகத்தின் சொத்து தாமிரபரணி 3 - {நமது தாமிரபரணி நதியின் வரலாறு மற்றும் அதன் அழிவுப்பாதை பற்றிய தொடர் }

முந்தைய பாகம்-2 ற்கு லிங்க்

http://gowthamthamizhan.blogspot.in/2015/11/2.html

தொடர்- 3

புல்வெளி தந்த குளியல்

தாமிரபரணி உற்பத்தியாகும் பூங்குளம். | படம்: கா.அபிசு விக்னேசு 

வரையாடு 

இங்கிருந்து 6 கி.மீ. தொலைவில் மிகப்பெரிய புல்வெளி வந்தது. ஆளை விழுங்கும் புல்வெளி அது. கண் கண்ணாடி அணிந்துக்கொண்டு முகத்தை துணியால் சுற்றிக்கொள்ளச் சொன்னார்கள். இல்லை எனில் முகத்தில் சிராய்ப்பை ஏற்படுத்திவிடும் இந்த புற்கள். புல்வெளியைக் கடப்பதற்குள் தெப்பலாக நனைந்துவிட்டோம். காலுக்கு கீழேயும் சதுப்புநிலம் போலி ருந்தது. அவ்வளவு தண்ணீரை சேமித்து வைத்திருக்கின்றன அந்தப் புற்கள். இதுவும் ஒருவகையில் தாமிரபரணி குளியல்தான். ஏனெனில் தாமிரபரணி உள்ளிட்ட தென்னிந்திய நதிகளுக்கு ஆதாரமே இதுபோன்ற புல்வெளிக் காடுகள்தான். இதனை முதன்முறையாக அனுபவரீதியாகவும் அறிந்துக்கொள்ள முடிந்தது. தொடர்ந்து முட்டு இடிச்சான் தேரி மலை, அட்டைக்காடு கடந்து வந்துதான், அத்திரிமலை பங்களாவில் ஒய்வு எடுத்துக்கொண்டிருக்கிறோம்.
வரையாடு
மறுநாள் அதிகாலை ஐந்தரை மணிக்கு எழுப்பிவிட்டார்கள். நடக்கத் தொடங்கினோம். இருளில் கண் முன் மலை பிரம்மாண்டமாகத் தெரிந்தது. வானம் புலர்ந்த பொழுதில் ஈத்தல் காட்டுக்குள் நுழைந்தோம். ஈத்தல் என்பது ஒருவகையான மூங்கில். அடுத்து கடும் ஏற்றம். உருண்டையான வழுக்குப் பாறைகளின் மீது ஏற வேண்டியிருந்தது. நடுவே சிறிய சமதளம் வந்தது. தாமரைக் குளம் என்றார்கள். காட்டாறு இது. ஆற்றில் இறங்கிக் கடக்கும் முன்பு மேகத்தை உற்று கவனித்தார்கள். மேகக்கூட்டத்தை வைத்து காட்டாற்று வெள்ளம் வருமா என்பதை கணிக்கிறார்கள்.
நண்பகல் 12 மணி வாக்கில் இன்னொரு சமதளம் வந்தது. ‘பொங் கலா பாறைஎன்றார்கள். இங்கிருந்து அரை மணி நேரம் ஏற்றம் ஏறியதும், உயர்ந்த பாறைச் சரிவில் இரும்பு ரோப் கட்டியிருந்தார்கள். நல்ல உயரம். “கீழே பார்த்தால் தலை சுற்றும். ஒரே மூச்சில் ஏறிவிடுங்கள்என்றார்கள். ஒருவழியாக ஏறிவிட்டோம். இங்கிருந்து உரலிடிச்சான் பாறை, வழுக்குப் பாறை, இடுக்குப் பாறை ஆகிய மூன்று பகுதிகளை கடந்தோம். மீண்டும் அதேபோல ஒரு இரும்பு ரோப். இன்னும் இது உயரம். “இங்கு மட்டும் ஏறிவிட்டால் பொதிகை மலை உச்சிஎன்றார்கள். மூச்சு முட்டியது. உடல் நடுங்கியது. தாமிரபரணி தாய் மீது பாரத்தை போட்டுவிட்டு, ஒரே மூச்சில் ஏறி, சமதளத்தில் சரிந்து விழுந்தோம்.
பொதிகை உச்சியில் அகத்தியர் சிலையாக காட்சியளித்தார். பக்தர்கள் பூஜைகள் செய்யத் தொடங்கினார்கள். ‘...’ என்ற சத்தத்துடன் ஆளையே அடித்துச் செல்வதுபோல காற்று வீசி யெறிந்தது. கடல் மட்டத்தில் இருந்து 6,122 அடி உயரத்தில் மலை உச்சியில் படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த் தோம். வானம் மெல்ல இருட்டத் தொடங்கியது.
வண்டுகளின் இடையறாத ரீங்காரம், விதவிதமான விலங்குகளின் குரல்கள் என இரவுக்காடு இன்னொரு அனுபவம் அளித்தது. தூரத்தில் ஒரு பக்கம் திருவனந்தபுரம் ஒளிர்கிறது. விண்ணில் நட்சத்திரங்கள் மின்னத் தொடங்கின. நிலா பொழிந்தது. வானம் அருகில் இருப்பதைப் போல பிரமிப்பு. மறுநாள் காலையில் தாமிரபரணி உற்பத்தியாகும் பூங்குளத்தை பார்த்து விடலாம் என்கிற நம்பிக்கை பிறந்தது!

பொதிகை மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதி களில் பல்வேறு சிற்றாறுகளாகவும் அருவிகளாகவும் வனத்துக்குள்ளும் நிலத்துக்குள்ளும் தவழ்ந்து வரும் தாமிரபரணி, தமிழகத்தின் பூங்குளம் இடத்தில் இயற்கையாக அமைந்த சிறு குளத்தில் வெளியே தெரிகிறது. குறிப்பிட்ட மாதங்களில் குளத்தைச் சுற்றிலும் கருடா மலர்கள் பூக்கின்றன. அதனால் இதனை பூங்குளம் என்று அழைக்கிறார்கள். இதுதான் தாமிரபரணியின் நதிமூலம் என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கிறது தமிழக வனத்துறை.

நமது பொதிகை மலைப் பயணத்தின் நோக்கமே நதிமூலமான பூங்குளத்தைப் பார்க்க வேண்டும் என்பதுதான். தமிழகம் வழியாக தற்போது பூங்குளத்தை அடைய முடியாது. அதேசமயம் கேரளம் வழியாக பொதிகை மலைப் பயணத்திலும் பூங்குளத்தை அடைய முடியாது. பொதிகை மலைப் பயணத்தில் மலை உச்சியில் இருந்து கீழே தூரத்தில் இருக்கும் பூங்குளத்தைப் பார்க்க மட்டுமே முடியும். அதுதான் நதிக்கும் நல்லது. நமக்கும் நல்லது


                                                                                                         இன்னும் ஓடுவாள்

No comments:

Post a Comment