Wednesday 18 November 2015

தாய்மொழி வழிக்கல்வி பயிலலாமே...!

⁠⁠⁠⁠⁠தாய் மொழிக்கல்வியைத் தவிர வேறு எந்த வழிக்கல்வியும் ஒரு முழுமையான சிந்தனையாளனை உருவாக்கிவிட முடியாது.
மனதில் தோன்றும் அனைத்து எண்ணங்களும் தாய்மொழியிலேயே தோன்றும். அந்த எண்ணங்களை செயல்வடிவம் கொடுப்பது எளிது. அதை விடுத்து பிறமொழிக் கல்வி என்பது உங்களை அறிவாளி ஆக்குமே தவிர சிந்தனையாளன் ஆக்காது.

மிகப்பெரும் சாதனை புரிந்த இந்திய விஞ்ஞானிகள் அனைவரும் தங்கள் பள்ளிப்படிப்பை தாய்மொழியிலேயே முடித்தனர்.
நாம் முன்னரே அறிந்த பழமொழியைப் போல

"உங்கள் வீட்டில் எவ்வளவு ஜன்னல்கள் உள்ளதோ அவ்வளவு மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள்.
ஆனால் உங்கள் வீட்டின் வாசல் என்றும் தமிழாகவே இருக்கட்டும்"

இன்று நிறைய குழந்தைகளின் வாயில் இருந்து தமிழைக் கேட்கவே முடிவதில்லை.
குறைந்தபட்சம் தவறில்லாமல்  எழுதவும் படிக்கவுமாவது தெரிந்திருக்க வேண்டும்.

என் கல்லூரிக்காலத்தில் எங்கள் உடன் படித்த பல தோழர், தோழிகளுக்கு தமிழ் மேல் ஆர்வம் கூட இல்லாமல் இருந்தனர்.

தினமும் அனைவருக்கும் காலையில் வணக்கம் சொல்லி குறுஞ்செய்தி அனுப்புவதுண்டு.
அவ்வாறு அனுப்பும் போது தூய தமிழில் அனுப்புவேன் அப்போது அவர்களில் சிலர் கேட்டது
"ஏன்டா தமிழ்ப்புலவர் ஆயிட்டயா."
காலை வணக்கத்தை தமிழில் சொல்வது கூட இப்போதெல்லாம் புலமை இருந்தால் தான் சொல்லவேண்டும் என்று ஆகி விட்டது.
இதற்கு எல்லாம் நம் முந்தைய தலைமுறையின் மனப்பான்மையும் ஒரு முக்கிய காரணம்  தான்.

நாமும் அதே தவறை தயவுசெய்து செய்ய வேண்டாம்.

இன்று நிறைய அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக கற்றுக்கொடுக்கிறார்கள். அரசுப்பள்ளி மாணவர்களும் பலர் இந்த முறை அரசுத்தேர்வுகளில் மாநில அளவில் சாதித்தும் வருகிறார்கள்.
அப்படியும் உங்கள் பகுதியில் கட்டமைப்பு வசதி மற்றும் பிற குறைகள் இருக்கும் காரணத்தால் தனியார் பள்ளிகளில் சேர்த்தாலும் தாய்மொழி வழிக்கல்வி மட்டுமே தேர்ந்தெடுங்கள்.

ஆங்கிலம் தெரியாத அளவிற்கு இந்த தலைமுறை ஒன்றும் அவ்வளவு மோசமாய் இல்லை. எனவே, பள்ளியில் பெற முடியாத அல்லது அதற்கு மேல் நீங்கள் விரும்பும் ஆங்கில அறிவை உங்கள் வீடுகளில் சொல்லித் தரலாம்.

இந்தக் கட்டுரையை எழுதும் நானும் கல்லூரியில் சேரும் வரை நம்தாய்மொழிக் கல்வி பயின்ற மாணவன் தான். இப்போது பணியாற்றுவது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் என்பதையும் இங்கு பதிவு செய்ய விழைகிறேன்.

வருங்காலம் நமது இளைஞர்களே..!

தமிழைக் காக்க வேண்டும் என்று கூக்குரல் மட்டும் தமிழைக் காத்திடாது.

அதற்கு உங்கள் பங்களிப்பு என்ன, உங்கள் தலைமுறையினரின் பங்களிப்புகள் என்ன என்பது தான் முக்கியம்.

நம்மை ஆங்கிலேயன் ஆண்டான்

அன்று.

நம்மை (நம் நாவை) ஆங்கிலம் ஆள்கிறது

இன்று.


படித்தும் தான் தாய்மொழியை சரியாக அறியாதவன் தன் மேலாடையை சரியாக உடுத்தாதவன் என்பதை உணர்க...!

நன்றி
கௌதம், இளையதலைமுறை

No comments:

Post a Comment