Friday 27 November 2015

தமிழகத்தின் சொத்து தாமிரபரணி 1 - {நமது தாமிரபரணி நதியின் வரலாறு மற்றும் அதன் அழிவுப்பாதை பற்றிய தொடர் }



நான் இது வரை தொடராக எதையும் எழுதியது இல்லை.
ஆனால் இன்று முதல் தொடர்ச்சியாக நமது தமிழ்நாட்டின் சொத்தாகிய தாமிரபரணி ஆற்றைப் பற்றி படித்த ஒரு செய்தியை தொடர்ந்து பதிவிட விரும்புகிறேன்.

என்றும் உங்கள் நல்ஆதரவுடன் .
இதை எமக்கு அளித்த எமது நண்பர் திரு தேவா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

நமது தாமிரபரணி நதியின் வரலாறு மற்றும் அதன் அழிவுப்பாதை பற்றிய தொடர்

தாமிரபரணி நதியின் நீர்ப்பிடிப்பு பகுதியான பொதிகை மலையை தமிழகம் வழியாக தற்போது அடைய முடியாது. கேரளம் வழியாகதான் செல்ல முடியும். கடல் மட்டத்திலிருந்து 6,122 அடி உயரத்தில் இருக்கிறது பொதிகை மலை. கேரளம் தொடங்கி தமிழகத்தின் திருநெல்வேலி, கன்னியாகுமரி வரை விரியும் ஆனைமலை வனத்தின் ஒரு பகுதிதான் பொதிகை மலை. இதனை அகத்தியர் மலை என்றும் அசம்பு மலை என்றும் அழைக்கிறார்கள்.
தாமிரபரணியின் மிக முக்கியமான நீர்ப்பிடிப்பு பகுதியான ஐந்தலைப் பொதிகை (ஐந்து தலை) இங்கிருக்கிறது. ஐந்து சிகரங்களை கொண்ட உயரமான மலை என்பதே அதன் பெயர்க் காரணம். பொதிகையின் உச்சியை அகத்தியர் மொட்டை என்றும் அழைக்கிறார்கள். மலையின் மேற்கு பகுதியில் திருவனந்தபுரமும் கிழக்குப் பகுதியில் திருநெல்வேலியும் இருக்கின்றன.
பொதிகை மலையின் உச்சியில் கேரள அரசு அகத்தியர் சிலையை நிறுவியுள்ளது. இதை நிறுவுவதற்காக ஹெலிகாப்டர் மூலம் சிலை யைக் கொண்டு சென்றது. அதன் பின்பு அகத் தியரை தரிசிப்பதற்காக முக்கியஸ்தர்கள் ஹெலி காப்டரில் வந்தபோது சிலை இருக்கும் இடம் தெரியாதபடி மேகக் கூட்டங்கள் மறைத்தன. பல முறை முயன்றும் ஹெலிகாப்டரில் அங்கு செல்ல முடியவில்லை. பின்பு இருநாட்கள் நடந்து சென்று தான் அகத்தியரை தரிசித்தார்கள். அவரை தரிசிக் கும் புனித யாத்திரைக்காக பல்வேறு கட்டுப்பாடு களுடன் மக்களை அங்கே அனுமதிக்கிறது கேரள அரசு. அப்படிதான் நாமும் சென்றோம்.
எப்படி செல்ல வேண்டும்?
திருவனந்தபுரத்துக்கு முன்பாக இருக்கிறது பாலோடு. கேரளத்தின் சிறு நகரம். அங்கிருந்து நன்னியோடு, விதுரா கலுங்கு, விதுரா தேவியோடு வரை பேருந்து உண்டு. இதன் பின்பு சொந்தமாக வாகனம் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். இங்கிருந்து 9 கி.மீ. தொலைவில் இருக்கிறது கேரள வனத்துறையின் காணிதலம் சோதனைச் சாவடி. இங்கிருந்து வனத்துக்குள் செல்ல வனத்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். ஒரு நபருக்கு ரூ. 2,500 கட்டணம். தனி நபராகவோ அல்லது இருவர் மூவராகவோ செல்ல முடியாது. குறைந்தது பத்து பேர் சேர்ந்தால் மட்டுமே ஒரு குழுவாக அனுமதிக்கிறார்கள். ஒரு குழுவுக்கு வழித்துணையாக வேட்டைத் தடுப்பு காவலர்கள் இருவர் வருகிறார்கள். பழங்குடியினரான காணி இன மக்கள் அவர்கள்.
பிளாஸ்டிக் பைகள், கண்ணாடி பாட்டில்கள், மது புட்டிகள், சிகரெட் இவை எல்லாம் கண்டிப்பாக தடை செய்யப்பட்ட பொருட்கள். அப்படியான பொருட்களை இருப்பது தெரிந்தாலே அவற்றை பறிமுதல் செய்வதுடன் அவற்றைக் கொண்டு வந்த நபர்களையும் திருப்பி அனுப்பி விடுவார்கள்.
காணி தலத்திலிருந்து வனம் தொடங்குகிறது. இங்கிருந்து போனக்காடு என்கிற வனத்துக்கு செல்ல வேண்டும். கடும் மலைப்பாதை அது. ஒருபக்கம் பெரும் பள்ளத்தாக்கு. வழியில் வருகிறது குருசடி வனம். இங்கே பழங்குடியினரான காணிகள் வசிக்கிறார்கள். காணிகளின் கலாச்சாரம் சுவாரஸ்யமானது. அதை பின்பு பார்ப்போம். இரண்டு மணி நேரப் பயணத்தில் வந்தது போனக்காடு வனம். இந்த பகுதியை போனக்காடு முகாம்-1 என்கிறார்கள். இங்கிருந்துதான் அடர் வனம் தொடங்குகிறது




                                                                                              - இன்னும் ஓடுவாள் தாமிரபரணி தொடரும் 

3 comments:

  1. வரலாற்றை படிக்காதவன் வரலாற்றை படைக்க இயலாது. தாமிரபரணியின் வரலாற்றை தங்கள் மூலம் அறிந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி நண்பா!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா பாலு

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete